21 ஆண்டு கால அனுபவங்கள்; ‘புத்தம் புதிதாய்’ ஜீவா!
‘ஒரு குவார்ட்டர் சொல்லு மச்சி’ என்ற வசனத்தைக் கேட்கும்போதெல்லாம், நமக்கு நடிகர் ஜீவாவின் முகம் நினைவுக்கு வரும். அதனை உத்தேசித்தே, அவரும் பல மேடைகளில் அந்த வசனத்தை உதிர்த்து வருகிறார்.
ஒவ்வொரு திரை நட்சத்திரமும் தங்களை ரசிகர்களிடம் கொண்டுசேர்த்த சில படங்களைத் தொடர்ந்து தங்களது அடையாளமாக முன்வைப்பது வழக்கமானதுதான்.
என்றாலும், ஜீவா அதனைச் சொல்லும்போதெல்லாம் நம்முள் ‘நீங்க வேற மாதிரி பாஸ்’ என்றே தோன்றும்.
காரணம், அவர் நடிப்பில் வெளியான பட வரிசை; அவற்றில் அவர் வெளிப்படுத்திய நடிப்புத் திறன்.
’சிவா மனசுல சக்தி’யையும் தாண்டி பல்வேறு முத்திரை படங்களை அவர் தந்திருக்கிறார். அதன் மூலமாகப் பார்வையாளர்களிடம் அவர் உருவாக்கிய தாக்கம் அதிகம்.
‘ஆசை ஆசையாய்’ அறிமுகம்!

பிரபல தயாரிப்பாளராகத் திகழ்ந்த சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரியின் மகன்களில் ஒருவர் ஜீவா.
பதின்ம வயதிலேயே திரையுலகில் ஒரு நடிகராக வெற்றிகளைக் குவிப்பது தான் தனக்கான இலக்கு என்று முடிவு செய்தார்.
அதன் விளைவாக, 2003இல் வெளியான ’ஆசை ஆசையாய்’ படத்தில் நாயகன் ஆனார்.
முரட்டு உருவமும் குழந்தைத்தன பாவனைகளுமாக இன்று நம்மைச் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ரவி மரியா இயக்குனராக அறிமுகமான படம் ‘ஆசை ஆசையாய்’.
அதில் ஜீவா மட்டுமல்லாமல் நாயகியாக நடித்த ஷர்மிலி எனும் மீனாட்சியும் கூட புதுமுகம் தான். இருவரையும் வைத்துக்கொண்டு ‘இளமை துள்ளுகிற’ ஒரு காதல் கதையைத் தந்திருந்தார் ரவி மரியா.
இந்தப் படத்தில், மணி சர்மா தந்த ‘தீப்பொறி போன்றது காதல்’ பாடல் சிலருக்குள் லட்சியத்தீயை வார்த்தது. அதேநேரத்தில் ‘இளமை என்பது’ ‘ஜீனு ஜீனு’, ‘காதல் ஒரு பள்ளிக்கூடம்’, ‘கன்னம் சிவக்க’ பாடல்கள் துள்ளலை விதைத்தன.
அதில் உச்சம் தொட்டிருந்தது ‘ஏ பெண்ணே திரும்பிப்பாரு’. 90’ஸ் கிட்ஸ் பலருக்குப் பிடித்தமானது அந்த பாடல்.
கிட்டத்தட்ட ‘குஷி’யும் ‘காதலுக்கு மரியாதை’யும் தென்படும் வகையில் ஒரு கலவையான ட்ரீட்மெண்ட் உடன் அப்படத்தைத் தந்தார் ரவி மரியா.
கவனத்தில் கொள்ளத்தக்க வெற்றியை அப்படம் பெறாதபோதும், ஜீவா நன்றாக நடித்திருக்கிறார் என்ற பெயரைப் பெற்றது.
20 ஆண்டுகள்!

‘ஆசை ஆசையாய்’ படத்திற்குப் பிறகு, மீண்டும் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ தயாரிப்பில் ‘தித்திக்குதே’ படத்தில் நடித்தார் ஜீவா.
2005இல் வெளியான அமீரின் ‘ராம்’ திரைப்படம் அவரை வேறொரு உயரத்திற்குக் கொண்டு சென்றது.
தொடர்ந்து சசியின் இயக்கத்தில் ‘டிஷ்யூம்’ படத்தில் ஒரு ஸ்டண்ட் கலைஞராகத் தோன்றினார். மேஜர் ரவியின் ‘கீர்த்தி சக்ரா’ மலையாளத்திலும் அவரை அறிமுகப்படுத்தியது.
ஜனநாதனின் ‘ஈ’, ராமின் ‘கற்றது தமிழ்’ ஆகியன ரொம்பவே தீவிரமான பாத்திரங்களை ஏற்கத்தக்கவர் ஜீவா என்ற எண்ணத்தைப் பரவலாக்கின.
தொடர்ந்து சிவா மனசுல சக்தி, கச்சேரி ஆரம்பம், கோ, ரௌத்திரம், நண்பன், நீதானே என் பொன்வசந்தம், டேவிட், என்றென்றும் புன்னகை, திருநாள், கலகலப்பு 2, கீ, சீறு, களத்தில் சந்திப்போம், 83 என்று நினைவில் வைக்கத்தக்க படங்களைத் தந்திருக்கிறார்.
இந்த இடைவெளியில் இருபது ஆண்டுகள் கடந்துவிட்டது ஆச்சர்யம்தான். ஏனென்றால், ‘ஆசை ஆசையாய்’ படத்தில் பார்த்த அதே தோற்றத்தோடு இன்றும் ஜீவா இருப்பதுதான்.
நட்புடன் ஜீவா!

ஜெயம் ரவி, ஆர்யா, மிர்ச்சி சிவா என்று பல நாயகர்களோடு நட்பில் இருப்பவர் ஜீவா. மேடைகளில் ஒருமையில் ஒருவரையொருவர் அழைக்கும் பாங்கும், செலிபிரெட்டி கிரிக்கெட் லீக்கில் சக நடிகர்களோடு அவர் கிரிக்கெட் விளையாடிய விதமும் அதனை மெய்ப்பித்தன.
பிற நாயகர்களின் படங்களில் கௌரவத் தோற்றத்தில் நடிக்கும் வழக்கமும் ஜீவாவுக்கு உண்டு. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் கிளைமேக்ஸில் ஆர்யாவுடன் தோன்றினார்.
தொடர்ந்து ‘சைஸ் ஜீரோ’, ‘கடவுள் இருக்கான் குமாரு’, ‘தமிழ்படம் 2’, ‘நித்தம் ஒரு வானம்’ என்று அவ்வழக்கத்தைத் தொடர்ந்து வருகிறார்.
மிகச்சில நிமிடங்களே திரையில் தோன்றினாலும், தனக்கான நாயக அந்தஸ்து கொஞ்சம் கூட குறையாது என்றெண்ணும் அவரது தன்னம்பிக்கையை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
இந்த நட்புக்கான மரியாதை என்னவென்பது நடைபெற்ற ஜீவா தொடங்கியிருக்கும் ‘டெஃப் பிராக்ஸ்’ நிறுவன தொடக்க விழாவில் காண முடிந்தது.
புதிய தொடக்கம்!
யூடியூப் தலைமுறையினர் மத்தியில் புகழ் பெற்றுவரும் புதிய பாடகர்கள், பாடகிகள், இசையமைப்பாளர்கள், நடன வடிவமைப்பாளர்கள், இயக்குனர் உட்படப் பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் நல்லதொரு வாய்ப்பினைப் பெறும் வகையில் ‘டெஃப் ப்ராக்ஸ்’ தளத்தை உருவாக்கியிருக்கிறார் ஜீவா.

நல்ல திறமையாளர்களை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பதே அதன் நோக்கம்.
திரைத்துறையில் ‘சூப்பர்குட் பிலிம்ஸ்’ பலரை அறிமுகப்படுத்தியது போன்று சமூக ஊடக உலகில் புதியதொரு கதவைத் திறந்திருக்கிறார் ஜீவா.
இது ஒரு புதிய தொடக்கம் என்றும் சொல்லலாம்.
கடந்த ஜனவரி 31ஆம் தேதியன்று இந்த விழா நடைபெற்றது. சரியாக 21 ஆண்டுகளுக்கு முன்னால், இதே நாளில் தான் ‘ஆசை ஆசையாய்’ திரைப்படம் வெளியானது.
இந்த நிறுவனம் அவருக்கு இன்னொரு அடையாளத்தை வழங்கியிருக்கிறது.
இந்த ஆண்டு, அவரது நடிப்பில் ‘யாத்ரா 2’ திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டியாக அவர் தோன்றியிருக்கிறார். ஆதலால், இது தெலுங்கு திரையுலகிலும் அவருக்குப் புதிய திறப்புகளை உருவாக்கும் என்று நம்பலாம்.
– உதய் பாடகலிங்கம்