ஆசிரியைக்கு சர்ப்ரைஸ் தந்த மாணவர்கள்!

– கல்வியாளர் உமா

தற்போது நான் பணியாற்றும் பள்ளிக்கு மூன்று மாதங்கள் முன்பு 2023, ஜூலை ஒன்றாம் தேதியன்று பணியேற்றேன். முதல் நாளிலேயே பல மாற்றங்கள் அவசியம் என்பதை உணர்ந்தேன்.

காரணம் காற்றோட்டமில்லா வகுப்பறையில் அறுபது மாணவர்கள். உட்காரவே இடம் போதாத நிலை. பெரும்பாலான குழந்தைகள் கையில் விசிறிகளுடன் தான் இருந்தனர். அடைத்து வைக்கப்பட்ட முறையில் குழந்தைகளது நிலை மிகவும் வருந்தத்தக்கது.

ஆகவே முதல் நாளின் முதல் வகுப்பிலேயே அவர்களுக்கு உறுதி அளித்தேன். நாம‌ எப்படியாவது ஃபேன் போட்டுடலாம் என்று. பெரும்பாலான வகுப்புகளில் இதுதான் சூழல்.

ஒரே வாரத்தில் மூன்று மின்விசிறிகள் போடப்பட்டன. மீண்டும் நண்பர்கள் உதவியுடன் இன்னும் சில வகுப்பறைகளுக்கு என இதுவரை 7 மின்விசிறிகள் போடப்பட்டுள்ளன.

மின்விசிறிகள் மாட்ட பள்ளியில் வேதியியல் ஆசிரியர்தான் செய்து தருகிறார். ஒருமுறை எலக்ட்ரீசியன் அழைத்தால் 400 ரூபாய் கேட்கின்றனர். (இந்த மின்விசிறிகள் போடப்படுவதில் மின்சாரக் கட்டணம் பிரச்சனையும் உள்ளது. அது தனியாகப் பேசப்பட வேண்டியது.)

ஒரு நாள் வகுப்பில் காலை நேரம் கணக்குப் பாடம் நடத்திக்கொண்டு இருக்கும் போது ஒரு அம்மா வந்தார்.‌ தனது மகன் மதிய உணவைக் கொடுத்துச் செல்ல வந்தேன் என்றார்.

நாம் எப்போதும் பெற்றோரை விட்டுவிடுவது இல்லை. நானாக என்னை அறிமுகம் செய்து கொண்டு (நான் புது டீச்சர்) அவர்களிடம் பேசினேன்.

அதற்குள் நிறைய மாணவர்கள் சத்தம் போட ஆரம்பிக்க, நானோ ..”ஒரு பெற்றோர் வந்து இருக்கும்போது இப்படி சத்தம் போட்டால் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்” என்றேன்.

அதற்கு அவரைப் பார்த்து சத்தத்துடன் சிரித்து எங்கள அவங்களுக்குத் தெரியும் மிஸ் என்றனர்.

ஒரு மாணவனின் தாய் என்றால் அவனது நண்பர்களுக்கு தெரிந்திருக்கும். மொத்த கிளாஸும் தெரியும் என்று கோரசாகக் கத்த… நான் தான் விழித்தேன்.

“எப்படி டா…” எனக் கேட்க, அவங்க வார்டு மெம்பர் என்றனர். ஓ… இதுதான் சரியான தருணம் என நினைத்து ரொம்ப சந்தோஷம், நீங்க இவர்களுடன் ஒரு உரையாடல் தாங்க என்றேன். அவரும் மிக மகிழ்ச்சியாக மாணவர்களுக்கு கல்வி குறித்து அக்கறை வேண்டும் என்று ஒரு ஐந்து நிமிடம் பேசினார்.

அதோடு, ”டீச்சர் வந்த உடனே உங்களுக்காக ஃபேன் போட்டுத்தந்து இருக்காங்க… நீங்க நல்லா படிச்சா இன்னும் தேவையானது செய்வாங்க” என்றார்.

நானோ… ரொம்ப சந்தோஷம்ங்க… பசங்க வகுப்பறை தரை உடைந்து ஒரே குண்டும் குழியுமா இருக்கு… நம்ம பசங்க படிக்கற எடம். கொஞ்சம் இதையெல்லாம் சரி பண்ணினா நல்லா இருக்கும் என்றேன்.

அவரும் சில நிமிடங்கள் யோசித்தவர், சரிங்க டீச்சர்.. நான் இதை செய்து தரப் பார்க்கிறேன் என்றார்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து காலாண்டுத் தேர்வு முடியும் தருவாயில் அவரை வரவழைத்து தலைமை ஆசிரியரிடம் உரையாடி அனுமதி பெற்று இதோ கடந்த ஐந்து நாட்கள் காலாண்டுத் தேர்வு விடுமுறையில்,

ஒரு சனிக்கிழமை முழுநாள் இதற்கான பணிகளை மாணவர் ஜெகதீஸ்வரனின் தாய் லலிதா அவர்கள் ஆட்களை அமர்த்தி, தானும் கூடவே இருந்து தரையை சரிப்படுத்தி இன்று மிகப்பெரிய உதவியை செய்துள்ளார்.

ஜெகதீஸ்வரனின் தாயார் லலிதா அவர்கள், தன் மகன் படிக்கும் வகுப்பறையை ஏறக்குறைய பதிமூன்றாயிரம் ( 13000 ) ரூபாய் சொந்தப் பணத்தை செலவழித்து தரையை சரிசெய்து கொடுத்துள்ளார்.

பள்ளி திறந்த முதல் நாளிலேயே தலைமை ஆசிரியர் வாழ்த்துகளைக் கூறினார். என்னங்க சார் என்றதற்கு அம்மா… உங்க கிளாஸ் ரூமை நீங்களே அருமையா பண்ணிட்டீங்க என்றார்.

அதற்கு லலிதா அம்மாவுக்கு தான் சார் வாழ்த்தும் நன்றியும் சொல்ல வேண்டும் என்றேன். கடந்த ஒரு வாரமாக வகுப்பறைக்கு தண்ணீர் விட்டு பராமரிப்பு செய்தது முழுவதும் எனது வகுப்பறையில் பயிலும் மாணவர்களேதான்.

சரி, திங்கள் கிழமை உட்கார்ந்து கொள்ள வகுப்புக்கு உள்ள போயிடலாம் என்றேன்.

இன்று காலையும் வகுப்பறையில் அமராமல் மரநிழலுக்கு வரும்போது ஏன் இங்கு இருக்கீங்க? வகுப்புக்குப் போகலாம் வாங்க என்றேன்.

மிஸ்… போக முடியாது… வந்து பாருங்கள் என்றனர். ஏன்டா இன்னுமா காயமாட்டேங்குது…. என்று போனால் ஒரே ஆச்சர்யம்… வகுப்பறைக்கு வண்ணம் அடித்து இன்ப அதிர்ச்சி.

யாருடா செஞ்சாங்க?

நாங்க தான் மிஸ்… என்று ஏழு பேர் முன்வந்தனர். அழுக்கான கிளாஸ மாத்தினோம் மிஸ் என்றனர்.

ஏன்டா சொல்லலை?

மிஸ் பிரஜன் தான் உங்களுக்கு சர்ப்ரைஸ் தரலாம்னான்…

இருந்தாலும் ஏதாவது விடுமுறையில் செய்யனும்னா எங்கிட்ட தகவல் சொல்லனும், தலைமை ஆசிரியரிடம் அனுமதி வாங்கணும் என்றதோடு தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் சென்று. விஷயத்தைக் கூற அவரும் இதையே கூறினார். பாராட்டவும் செய்தார்.

வகுப்பறையில் எல்லா மாணவிகளும் மாணவர்களும் ஓடிவந்து மிஸ் தேங்க்ஸ் மிஸ்… கிளாஸ் புதுசாயிடுச்சு என்றனர்.

அந்த ஏழு பேர் அடங்கிய குழுவுக்கு தான் நாம் எல்லோரும் சேர்ந்து நன்றி சொல்லணும் என்றேன். அரசுப் பள்ளிகளில் நிறைய போதாமைகள் இருக்கின்றன.

பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக எதுவுமே நடப்பதில்லை என்பது தான் எதார்த்தம். நமது வீட்டைப் பராமரிப்பு செய்வது போலத்தான் அரசுப் பள்ளிகளில் வருடம் ஒருமுறையாவது சுவற்றை புதுப்பிப்பது அவசியம்.

எந்த வசதி வாய்ப்புகளும் செய்து தராத கல்விக் கொள்கைகளுக்கு எதிராக நான் பேசி வந்தாலும் களத்தில் இருக்கும் எனது குழந்தைகளது மனநிலை சூழல் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மற்றவரிடம் உதவி கேட்டு பள்ளித் தேவைகளை செய்து வருகிறேன்.

நிதி ஒதுக்கீடு அரசு செய்ய வேண்டும், நாம் செய்யக் கூடாது இது முரண்பாடாக இருந்தாலும் குழந்தைகள் நலம் வேண்டி இதை செய்ய வேண்டிய தேவை.

ஆசிரியர்களது பணி கற்பித்தலைத் தாண்டி எத்தனை தூரம் பயணிக்க வேண்டிய அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது என்பதை பொதுச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

மற்ற வகுப்பு குழந்தைகளும் என்னிடம் அடிக்கடி கேட்கும் கேள்வி… மிஸ் எங்களுக்கும் ஃபேன் போட்டுத்தாங்க…உங்க கிளாஸ்க்கு மட்டும் தரை போட்டுட்டீங்க… எங்களுக்கும் தான உடைஞ்சு இருக்கு? இதற்கு வருத்தமான புன்னகையையும் செய்து தர முயற்சிக்கிறேன் என்ற வார்த்தைகளையும் சொல்லி நகர்கிறேன்.

You might also like