பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, ஜுன் மாதம் நிறைவடைய உள்ளது.
அதற்கு முன்பாக ஏப்ரல் மாத வாக்கில் மக்களவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 2024-25ஆம் நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார் .
தேர்தலை குறிவைத்து, வருமான வரி வரம்பு உயர்த்தப்படும் – பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் – பெண் வாக்காளர்களை கவர்வதற்கான சலுகைகள் இருக்கும் என பல்வேறு தரப்பினரும் இடைக்கால பட்ஜெட்டை பெரிதும் எதிர்பார்த்தனர்.
ஆனால், பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் ஏதும் இல்லை.
இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள புதிய அறிவிப்புகள்:
3 கோடி பெண் லட்சாதிபதிகள்
அடுத்த 5 ஆண்டுகளில் கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகள் கட்டித்தரப்படும்.
வீட்டின் மொட்டை மாடியில் சோலார் அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசம்.
நாடு முழுவதும் கூடுதலாக மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாகக் குழு அமைக்கப்படும்.
கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுக்கத் தடுப்பூசித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
ஊட்டச்சத்து குறைபாடுகளை சரிசெய்ய புதிய செயலி அறிமுகம் செய்யப்படும்.
அங்கன்வாடி மற்றும் ஆஷா மருத்துவப் பணியாளர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பால் உற்பத்தியை அதிகரித்து பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பெற நடவடிக்கை.
பால்பண்ணை உரிமையாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் புதிய திட்டம்.
நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்.
தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை ஊக்குவிக்க 1 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக 1 லட்சம் கோடி ரூபாயில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
நடுத்தர வர்க்கத்தினருக்கான வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தபடும்.
3 சரக்கு பொருளாதார ரயில்வே வழித்தடம் புதிதாக அமைக்கப்படும்.
3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதன்படி வரும் ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 3 கோடி பெண்கள் லட்சாதிபதிகளாக்கப்படுவர்.
மாநிலங்களுக்கு 50 ஆண்டுகால வட்டியில்லா கடன் வழங்கப்படும்.
25,000 ரூபாய் வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும். இதன்மூலம் 1 கோடிப் பேர் பயனடைவார்கள்.
வேகமாக உயர்ந்து வரும் மக்கள் தொகையால் ஏற்படும் சவால்களை கண்டறிய உயரதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்படும்.
மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது இடைக்கால பட்ஜெட் என்பதால் வரி முறைகளில் மாற்றங்கள் செய்யப்படவில்லை – ஜுலையில் முழு பட்ஜெட்டை பாஜக அரசு தாக்கல் செய்யும் – அப்போது நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.
வழக்கமாக பட்ஜெட் தாக்கலின்போது, திருக்குறள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களில் இருந்து சில வரிகளை நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டுவார்.
இந்த முறை அவற்றை பயன்படுத்தவில்லை.
விலை குறையாது – உயராது:
“இந்த பட்ஜெட், வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்களான இளைஞர்கள், ஏழைகள், பெண்கள், விவசாயிகள் ஆகியோருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஆனால் எதிர்க்கட்சி தலைவர்கள் பட்ஜெட்டை குறை கூறியுள்ளனர்.
“எடை போட்டுப் பார்க்க ஏதும் இல்லாத வெற்று அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் – பொதுமக்களுக்கு இந்த பட்ஜெட் ஏமாற்றத்தையே அளித்துள்ளது” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
“மத்திய பட்ஜெட்டில் நேரடி மற்றும் மறைமுக வரி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே எந்தப் பொருளின் விலையும் குறையாது – விலையும் அதிகரிக்காது” என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
– பி.எம்.எம்.
#பாஜக #பிரதமர்_மோடி #மக்களவை_தேர்தல் #இடைக்கால_பட்ஜெட் #நிதியமைச்சர்_நிர்மலா_சீதாராமன் #வருமான_வரி #பெட்ரோல் #டீசல் #வந்தே_பாரத்_ரயில் #மத்திய_பட்ஜெட் #Interim_Budget #nirmala_sitharaman #bjp #pm_modi #seetharaman #petrol